கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தமிழ் - முஸ்லீம் தரப்புகள் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் இணைந்து தீர்வுகாண முன்வரவேண்டும். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு

2019-06-25

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு முழுமையான பிரதேச செயலகமாக செயற்படுவது அங்குள்ள மக்களின் தேவைகளுக்கும் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கும் அரசாங்க நிர்வாகப் பரவலாக்கத்திற்கும் அவசியமானதொன்றாகும்.

கல்முனை வடக்குத் தமிழ் மக்களின் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு தனியான பிரதேச செயலகமாக மாற்றப்படவேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையினைக் குறுகிய இன, மத, பிரதேச நிலைப்பாடுகளுக்கு அப்பால், நியாய சிந்தனை அடிப்படையிலும் தமிழ் - முஸ்லிம் மக்களின் பாரம்பரிய இருப்பு, வரலாறு மற்றும் உறவுநிலைகளின் அடிப்படையிலும் வைத்து நோக்குதல் வேண்டும். எனப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாகப் பொதுச்செயலாளர் தோழர் சி. கா. செந்திவேல் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில், கடந்த காலங்களில் இவ் விடயத்தில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து, முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கையில் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்திருப்பின், கடந்த ஒருவார காலமாக இடம்பெற்று வந்த உண்ணாவிரதமும் அதற்குப் போட்டியான சத்தியாக்கிரகமும் இடம்பெற வழியேற்பட்டிருக்காது.

இவ்விடயத்தில் பௌத்த பேரினவாத சக்திகள் தலையிடுவதற்கும் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவை உடைத்து, பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு வலுச்சேர்க்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டமை துயரமானதாகும்.

அத்துடன் இவ்விடயத்தில் பாராளுமன்ற வாக்குப்பெட்டி அரசியல் சக்திகள் தத்தமது நோக்கங்களை ஈடேற்றிக்கொள்ள முயன்று நிற்கின்றமையும் வெளிப்படையான உண்மையாகும்.

எனவே இவ்விடயத்தில் குறுகிய ஆதிக்க அரசியல் அதிகார நோக்கின்றி, முஸ்லிம் - தமிழ் மக்களின் ஐக்கியத்திற்குக் கேடு விளைவிக்காது, ஒருவரது உரிமையினை மற்றவர் பறிக்க முற்படாது, இணக்கமான தீர்வுக்கு முன்வரவேண்டும்.

அதற்குள்ள ஒரே வழி, இன, மத அடிப்படைகளிலான ஆதிக்க சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, முஸ்லீம் மக்களின் அச்சம் களையப்படுவதற்குரிய நடவடிக்கைகளையும், நம்பிக்கையூட்டும் செயற்பாடுகளையும் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பதுடன், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை நியாய சிந்தனையின் அடிப்படையில் தரமுயர்த்தி முழுமை பெற முஸ்லிம் மக்கள் தமது சகோதர ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதையே உழைக்கும் மக்கள் கட்சியான எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

கடந்த ஏப்ரல் 21 குண்டுவெடிப்புடன் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் செயற்பாடுகளும் பிரசார வழியாகவும் சில இடங்களில் வன்முறை வழிகளிலும் வெளிப்பட்டது. இதில் சில பௌத்த குருமார் முன்னின்றனர். அதனை வாக்குப்பெட்டி ஆட்சியதிகாரக் கட்சிகள் பயன்படுத்தத் தவறவில்லை.

இந்நிலையில் நீண்டகாலமாகப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் தமிழ் மக்கள், இன்று அதே ஒடுக்குமுறைக்கு மிகவும் மோசமான வகையில் உள்ளாகி நிற்கும் முஸ்லீம் மக்களோடு முரண்பட்டு, குறுகிய இன, மத, பிரதேச அடிப்படைகளிலான பிரிவினைச் சிந்தனையுடனும் செயற்பட முற்படுவது வரவேற்புக்குரியதல்ல.

அத்துடன் தமது பாராளுமன்ற, மாகாணசபை ஆசனங்களுக்காக வாக்கு வங்கியை இலக்காகக் கொண்ட அரசியல்வாதிகளின் பிரித்தாளும் தந்திரத்திற்குத் தமிழர்களும் முஸ்லீம்களும் பலியாகாது, வாக்கு வேட்டைக்காகச் சாதாரண முஸ்லிம் - தமிழ் மக்களை மோதவிட முனையும் அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டு நிராகரிக்க வேண்டும்.

எனவே பேரினவாத ஆளும்வர்க்க ஒடுக்குமுறைக்கு உள்ளாகிநிற்கும் முஸ்லீம்களும் தமிழ் மக்களும் தமக்குள் விட்டுக்கொடுப்புகளுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியம். அந்தவகையில், கல்முனை மண்ணை உண்மையாக நேசிக்கும், அதன் அபிவிருத்திக்காகப் பாடுபடும் தமிழ் - முஸ்லீம் தரப்புகளில் உள்ள முற்போக்கு சக்திகள் மற்றும் சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் தமக்கு முன்னுள்ள சமூகப் பொறுப்பையும், இந் நெருக்கடியான காலத்தின் கட்டாயத்தையும் உணர்ந்து, தூரநோக்குடன் சிந்தித்து, தமது பூர்வீகமான வாழ்விடப் பாதுகாப்பிற்காகவும், மகிழ்வான வாழ்வுக்காகவும் இப் பிரச்சினைகயைத் தீர்க்க இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என அழைப்புவிடுக்கின்றோம். எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.