மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம்.

2019-08-15

1947 களின் பின்னர் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவருகின்ற ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்திற்கு இந்திய அரசியலமைப்பின் 370 இலக்க உறுப்புரை மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து, அம் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அனுமதியோ, மக்களது சம்மதமோ பெறப்படாமல், மத்தியில் ஆட்சி செலுத்துகின்ற நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்தினால் எதேச்சாதிகாரமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

நரேந்திரமோடி அரசாங்கத்தின் ஜம்மு காஷ்மீர் மீதான இவ் ஆக்கிரமிப்பு அராஜக நடவடிக்கைகளை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினரை ஜம்மு – காஷ்மீர் பிராந்தியத்தில் குவித்து, ஊரடங்குச் சட்டத்தை அறிவித்து, மக்களை அச்சுறுத்தி, மாநிலம் முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்து, அங்குள்ள அரசியல், சமூகத் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ள நிலையில், சிறப்புரிமையை இரத்துச் செய்துள்ளதுடன், வல்லாதிக்கத்தின் மூலமாக அப்பிராந்தியத்தை அதிகாரங்களற்ற இரண்டு யூனியன்களாகப் பிரித்து, லடாக் பிரதேசத்தை இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் நேரடியாகக் கொண்டுவந்துள்ளது.

இதனால் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை இந்துத்துவ அடிப்படைவாதக் கொள்கையைப் பின்பற்றுகின்றதான பாசிச பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கம் கால்களில் போட்டு மிதித்துள்ளது. அத்துடன் இச் செயல்மூலம் அம் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான நீண்டகாலக் கோரிக்கைக்கும் போராட்டங்களுக்கும் சாவுமணி அடித்துவிடலாம் எனத் தப்புக்கணக்குப் போடுகிறது.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மக்கள் சுயாட்சிக்காகப் போராடி வந்துள்ளார்கள். அவர்களது நியாயமான கோரிக்கையை இதுவரை இருந்துவந்த இந்திய மத்திய அரசாங்கங்கள் கொடுமையான முறையில் இராணுவத்தை ஏவிவிட்டு ஒடுக்கியே வந்துள்ளன. அவை பயங்கரவாதத்தை முறியடித்தல், பாகிஸ்தானின் ஊடுருவலைத் தடுத்தல் என்ற பெயர்களில் அம் மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வந்தன.

இந்நிலையில் தற்போது சிறப்பு அந்தஸ்தை நீக்கி, இந்திய வல்லாதிக்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீர் பிராந்தியத்தைக் கொண்டுவந்ததன் மூலம், முஸ்லீம் மக்களை அடக்கி ஒடுக்கவும், இந்துத்துவ அடிப்படைவாத நோக்கிலான ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளவும் பாசிச பா.ஜ.க. அரசு முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றது.

அதேவேளை, இந்திய கோப்ரேட் முதலாளிகளுக்கும் பல்தேசிய கொம்பனிகளுக்கும் ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தைக் கட்டுப்பாடுகளற்ற வகையில் அகலத் திறந்துவிட்டுள்ளது. முகேஸ் அம்பானியின் ரிலயன்ஸ் நிறுவனம் அம் மாநிலத்தில் அதிகமாக முதலிடவுள்ளதாக அறிவித்துள்ளமை இதன் உண்மைத்தன்மையை நாம் உணர்ந்துகொள்வதற்குச் சிறந்த ஆதரமாகும். இதேபோன்று இப் பிராந்தியத்தில் அதானி, டாட்டா போன்றோரும் தமது வளச் சுரண்டல், கொள்ளைகளை நடாத்தத் தயாராவார்கள். இவற்றுக்கெல்லாம் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி செங்கம்பளம் விரிக்கின்றது. ஜம்மு காஷ்மீரைக் கபளீகரம் செய்து இந்தியாவுடன் இணைத்துக்கொண்டதே இத் தாரைவார்ப்பிற்கேயாகும்.

எனவே, நரேந்திரமோடி அரசாங்கத்தின் ஜம்மு காஷ்மீர் மீதான இவ் ஆக்கிரமிப்பு அராஜக நடவடிக்கைகளை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்ற அதேவேளை, அம் மக்களின் சுயாட்சிக்கும் சுயநிர்ணய உரிமைக்கும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்குமான போராட்டங்களுக்கும் எமது கட்சி முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றது.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்