எவர் பதவிக்கு வந்தாலும் மக்கள் மீதானதும் இயற்கைச் சூழல் மீதானதுமான அடக்குமுறைகளும் சுரண்டலும் தொடரத்தான் போகிறது.

2019-12-27

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறிக்கை.

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு, ஆளும் வர்க்க கட்சிகளில் இருந்து அதிகார நாற்காலிக்கு வருவதற்கான போட்டியே ஜனாதிபதித் தேர்தல். இப்பதவிக்கு யார் வந்தாலும் நாட்டின் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் மோசமடைந்து காணப்படும் நெருக்கடி மிக்க வாழ்க்கை நிலைமைகள் மாறப்போவதில்லை. அதேபோன்று ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்கப்போவதுமில்லை. எனவே இந்தத் தேர்தலின் முடிவுகளை ஊகிப்பது கடினமல்ல. இதில் வெல்லப்போவது ஆளும் வர்க்கமே. தோற்கப்போவது நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும்தான் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.

இதனையே கடந்த 41 ஆண்டுகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையில் மக்கள் கண்டு வந்துள்ளனர். எனவே, மக்களின் பணத்தில் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு நடாத்தப்படும் இத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எந்த ஜனாதிபதியாலும் நாடும் மக்களும் எதிர்நோக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காணமுடியாது என்பதே உண்மையாகும். அதனால் நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும், குறிப்பாக ஒடுக்கப்பட்டு வரும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் தேசிய இனங்களும் இத்தேர்தலில் அக்கறைப்படுவதிலும் ஆர்வம்கொள்வதிலும் எவ்வித அர்த்தமும் இருக்கமுடியாது.

வாக்களிப்புக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும் அப்பாலான, மக்களரசியலோடும் வெகுஜனப் போராட்டங்களோடும் மக்கள் தம்மை இணைத்துக்கொள்வதே உண்மையான மாற்றத்துக்கான வழிமுறையாகும், என்பதே புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் நிலைப்பாடாகும்.

இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக ஜனாதிபதித் தேர்தல் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடந்த 41 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையும் தனியார்மயப்படுத்தலும் அந்நியப் பொருள்களின் இறக்குமதியும் பல்தேசிய கொம்பனிகளின் வருகையும் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசம் செய்துள்ளன. இவற்றால் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்து, இறக்குமதியும் நுகர்வும் அதிகரித்து, நாடு கடனில் மூழ்கியுள்ளது. இக்கடனால் இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஐந்து இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய்களுக்குக் கடனாளிகளாக உள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அன்றாடப் பாவனைப்பொருட்களின் விலைகளும் உச்ச நிலைக்குச் சென்றுள்ளன. மக்களின் வாழ்க்கைத்தரம் கீழ் நிலைக்கு வந்துள்ளது. நாட்டில் 45 வீதத்திற்கு மேலானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோராக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனியார்மயக் கொள்கையால் கல்வியும் சுகாதாரமும் சீரழிக்கப்பட்டுள்ளதையே காணமுடிகிறது.

நாட்டின் 52 வீதமானோர் பெண்களாக உள்ளனர். அவர்களின் உழைப்பு பலவழிகளில் சுரண்டப்படுகின்றது. அத்துடன் அவர்கள் மீதான பாலியல் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வந்துள்ளது.

போதைப்பொருட்களின் கடத்தலும் பாவனையும் என்றுமில்லாதளவு அதிகரித்து வந்துள்ளது. அதேபோன்று, ஊழலும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் பெருகியுள்ளன. அதேவேளை, உழைக்கும் மக்களுடைய உரிமைகளைக் கேட்டுப் போராடுவோருக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்ச்சியாக ஏவப்பட்டு வந்துள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டம் முதல், கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் வரையான அடக்குமுறைச் சட்டங்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளின் கீழேயே கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்று தொழிலாளர்களுக்கு எதிரான தொழிற்சங்க உரிமைகளை மறுக்கும் சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மத்தியில் அன்னிய மூலதனத்தின் ஊடுருவல்களும் அந்நிய சக்திகளின் ஆதிக்கமும் வளங்கள் கொள்ளையிட்டுச் செல்லப்படுவதும் தாராளமாகவே இடம்பெற்று வந்துள்ளன. ஊழலாலும் குறுக்குவழிகளாலும் சேர்த்த பெருந்தொகைப் பணம், இன்று ஆளும் வர்க்கக் கட்சிகளால் ஜனாதிபதித் தேர்தலில் தண்ணீராக இறைக்கப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த 41 ஆண்டுகளில் நாட்டின் பிரதான பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் ஆளும் வர்க்க கட்சிகளின் அனைத்து ஜனாதிபதிகளும் இருந்து வந்தனர் என்பது வெளிப்படை.

மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட கொடிய போரினால், வடக்கு கிழக்கு மக்கள் உயிரிழப்புகளுடன் இருப்பிடங்களையும் இழந்தனர். இறுதிப் போரின்போது பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர்கள் காயப்பட்டு கை, கால் இழந்தனர். இன்றும் அவர்கள் தத்தமது அவயவங்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர்.

தமது பிள்ளைகளையும் துணைவர்களையும் போரில் இழந்து, வடக்கு கிழக்கில் சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விதவை எனும் சமூக அடையாளத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆக வாழ்ந்து வருகின்றனர். மேலும், பல ஆயிரம் பேர் வரை காணாமல் ஆக்கப்பட்டனர். இன்றும் சிறைகளில் அரசியல் கைதிகளாக நூற்றுக்கு மேற்பட்டோர் இருந்து வருகின்றார்கள்.

மேலும், படைத்தரப்புகளால் பிடிக்கப்பட்ட நிலங்கள் இப்பொழுதும் அவர்களிடமே இருந்து வருகின்றன. அவற்றை மீட்பதற்கு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் அத்தகைய கொடிய போரை முன்னெடுத்த ஆளும் வர்க்க கட்சிகளின் பிரதிநிதிகளும் அவர்களுக்கு உறுதுணையாய் நின்றவர்களுமே இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் பிரதான போட்டியாளர்களாக நிற்கின்றனர்.

தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிராக மோசமான இன, மத துவேஷப் பிரசாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்ததன் விளைவாக நாட்டின் பல பிரதேசங்களில் வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. இவற்றால் முஸ்லீம் மக்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் ஏப்பிரல் 21 குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிராக மோசமான துவேஷப் பிரசாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டதுடன், கைதுகளும் அச்சுறுத்தல்களும் நிகழ்ந்தன. இலங்கையின் அனைத்து முஸ்லீம்களும் அச்சம் பீதியுடன் இருந்தனர். இவ்வாறு முஸ்லீம்கள் மீது அடக்குமுறைகள் இடம்பெற்ற போதும் ஜனாதிபதிப் பதவியில் இருந்தவரால் எதுவும் செய்யமுடியவில்லை.

அதேபோன்று ஜனாதிபதிப் பதவியில் இருந்த எவரும் மலையக மக்களை நாட்டின் வருவாய்க்கு உழைக்கும் மக்களாக பார்க்க முடியாதவர்களாகவே இருந்து வந்தனர். அதனால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்த சம்பள உயர்வு, காணி, வீடு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஆளும் வர்க்கக் கட்சிகள் கவனம் எதனையும் செலுத்தவில்லை.

அதேவேளை தோட்ட முதலாளிகளுக்கு சார்பாக எல்லா ஜனாதிபதிகளும் இருந்து வந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவெனில், தமிழ் மக்களும் மலையகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் கடந்தகால ஜனாதிபதிகளைத் தெரிவு செய்வதில் பெரும் பங்கு வகித்து வந்தமையாகும். ஆனால் எல்லா ஜனாதிபதிகளுமே தமிழ் முஸ்லீம் மலையக மக்களை பேரினவாத நிலைப்பாடில் நின்று புறந்தள்ளி வந்தனர் என்பதே வரலாறாகும்.

எனவே நாட்டின் உழைக்கும் மக்களாகவும் ஒடுக்கப்படுவோராகவும் இருந்து வரும் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்கள் போன்று, எவர் வெற்றிபெற்று பதவிக்கு வந்தாலும் எவ்வித சுபீட்சமோ விமோசனமோ கிடைக்கப்போவதில்லை. பதவிக்கு வரும் எவரும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்நாட்டு பெரும் - தரகு முதலாளிகளுக்கும் அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கும் சேவை செய்வர். அதே போன்று ஏகாதிபத்திய, பிராந்திய, மேலாதிக்க, வல்லரசு நாடுகளின் தேவைகளுக்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு நடந்து கொள்ளவே செய்வார்கள். நாடும் அனைத்து மக்களும் துன்ப துயரங்கள் நிறைந்த வாழ்வைத் தொடர வேண்டிய சூழலே நீடித்து நிற்கும்.

இவற்றின் காரணமாகவே எமது கட்சி இந்த ஜனாதிபதித் தேர்தலில் எவரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.

ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாகவும் வளங்களைக் கொள்ளையிடக் கூடியதாகவும் எம் நாட்டை மாற்றிவைத்திருக்கும் நவதாராளவாத, முதலாளியக் கொள்கைகளும் அதற்கான ஆட்சி அதிகாரக் கட்டமைப்பும் மாறாதவரை, உண்மையான மாற்றம் என்பது சாத்தியமற்றது. ஏகாதிபத்திய முதலாளியச் சுரண்டலுக்கு எதிராக மக்கள் திரண்டெழாமல் தடுப்பதற்காகவும் உணர்ச்சி அரசியலூடாக தமது ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடந்து பேணப்படுவரும் தேசிய இன ஒடுக்குமுறையும் மாறாது.

வெறுமனே ஜனாதிபதி இருக்கையில் அமர்பவரை மாற்றுவதன் மூலம் இந்தக் கட்டமைப்பை மாற்ற முடியாது. ஏற்கனவே மாறி மாறி பதவியில் இருப்பவர்களை விட்டுவிட்டு ஊழலற்ற நேர்மையான நல்லவரொருவரை ஜனாதிபதியாக்கினால், மாற்றம் வந்துவிடும் என்று சிலர் மக்களை நம்பவைக்க முயற்சிக்கிறார்கள். இந்தச் சுரண்டல் கட்டமைப்பை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அதனைக் காப்பாற்றும் முயற்சியாகவே இந்த வாதத்தினை நாம் காண முடியும்.

எவர் பதவிக்கு வந்தாலும் மக்கள் மீதானதும் இயற்கைச் சூழல் மீதானதுமான அடக்குமுறைகளும் சுரண்டலும் தொடரத்தான் போகிறது. அவற்றுக்கு எதிராகப் போராடும் மக்களோடு இணைந்து நிற்பதும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடுவதுமே உண்மையான மாற்றத்துக்கான வழிமுறையாகும்.

ஜனாதிபதித் தேர்தல் எனும் வீண்செலவுப் பரபரப்புக்களுக்கு எடுபடாமல், மக்களோடு நின்று போராடும் சக்திகளை இனங்கண்டு, அவர்களைப் பலப்படுத்துவதும் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஆதரவினை வழங்குவதுமே மக்களுக்குச் சார்பான மாற்றங்களை இந்நாட்டில் ஏற்படுத்தும்.

இத்தகைய கொள்கைகளையுடைய இடதுசாரி சக்திகளுள் சிலவும் பதவிக்காகவன்றி, மக்களை அறிவூட்டி அரசியல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தல் மேடையைப் பயன்படுத்த முன்வந்துள்ளதனை நாம் அடையாளம் காணலாம்.

எனவே, தேர்தல் பரபரப்புக்களிலும், ஆளும் வர்க்கக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் கவனத்தையும் நம்பிக்கையையும் வைத்து ஏமாறாமல், உண்மையான மாற்றத்துக்கும், மக்கள் அதிகாரத்தை இந்நாட்டில் நிலைநிறுத்துவதற்குமாக தேர்தலுக்கு வெளியே நிகழும் தொடர்ச்சியான மக்கள் அரசியல் வேலைத்திட்டங்களை ஆதரித்து, புரட்சிகர இடதுசாரி சக்திகளோடு தம்மை இணைத்துக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என எமது கட்சி அழைப்பு விடுக்கிறது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.