தேர்தல் முடிவு மக்கள் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது

2019-12-27

எமது நாட்டின் வடக்கு கிழக்குத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகிய தேசிய இனங்கள் எதிர்கொள்கின்ற தேசிய இனப் பிரச்சினையானது, இந் நாட்டின் பிரதான முரண்பாடாக நீடித்து வருவதையே அண்மைய ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் யதார்த்த பூர்வமாக மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. சிங்கள பௌத்த பெருமுதலாளிய ஆளும் வர்க்க சக்திகள் பேரினவாதத்தை முன்னெடுத்து, எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவுள்ள தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயநிலை தற்போது உருவாகியுள்ளது. தேர்தலைத் தொடர்ந்து இடம்பெறும் வன்செயல்கள் அதை உறுதிசெய்கின்றன. இத் தகாத செயல்களை எமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இம் மக்கள் விரோத செயற்பாடுகள் தொடராது தடுக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றது.
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்~ பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். அவரது பதவி ஏற்பு அனுராதபுரத்தில் துட்டகெமுனுவின் நினைவிடத்தில் இடம்பெற்றது. அதில் அவர் ஆற்றிய உரையில் தான் அதிகமான சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றிபெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தமை, ஏற்கனவே பல்வேறு ஒடுக்குதல்களுக்கு உள்ளாகி வரும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களைச் சேர்ந்த சாதாரண மக்களுக்கு நல்ல சகுனம் அல்ல என்பதை உணரமுடிகிறது. புதிய ஜனாதிபதியின் வெற்றி மூலம் முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்~ அவர்களின் குடும்ப ஆட்சி மீண்டும் அரங்கேறியுள்ளது.


இந் நிலையில் வடக்கு கிழக்குத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலான சாதாரண உழைக்கும் மக்களும், சமூக ஒடுக்குதல்களுக்கு உள்ளான அடிநிலை வாழ் மக்களும் தமது பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு எதிராகத் தூரநோக்குடைய கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்டு முன்செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அத்துடன், சிங்கள உழைக்கும் மக்களுடனும், சமூக ஒடுக்குதல்களை எதிர்கொள்ளும் அடிநிலை வாழ் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து முன்செல்வதே குறித்த அபாயங்களை எதிர்கொண்டு வெற்றியடைய, நம் அனைவர் முன்னாலும் உள்ள ஒரே மார்க்கம் என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.


நாடு பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி நிற்கின்றது. கடன் பளு நாட்டு மக்கள் அனைவரையும் அமுக்கி வருகின்றது. அத்தியவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு, வறுமை, வேலையின்மை, வீடு இன்மை, போதிய சம்பள உயர்வு மறுக்கப்படுகின்றமை, பொதுக் கல்வி, சுகாதாரத் துறைகள் சீர்குலைக்கப்படுகின்றமை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எவை என்ற கேள்வி எழுகின்றது. இவற்றுக்கு சிங்கள பௌத்த பேரினவாதம் திரையாகுமே தவிரத் தீர்வுகளைத் தராது. ஏனெனில், இவை யாவும் இப்போது இலங்கையில் நிலவும் நவகொலணிய நவதாரள பொருளாதாரக் கட்டமைப்புடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எனவே, நாட்டின் இறைமை, சுதந்திரம், சுயாதிபத்தியம், சுயசார்பு ஆகியவற்றை ஏகாதிபத்திய, பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் துணிவு புதிய ஜனாதிபதிக்கு வருமா என்பதைச் சிறிது பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.


ஆதலால் நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், உரிமைகளுக்காகவும் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரளவேண்டியதன் அவசியத்தையே தேர்தல் முடிவு தெரிவித்து நிற்கின்றது.
இவ் அறிக்கையானது நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவு தொடர்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.


சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்