உழைக்கும் மக்களின் ஜனநாயக, தொழிற்சங்க, மனித உரிமைகளை அபாயத்தில் தள்ளும் 20ம் திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம்

2020-09-12

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆகிக்கொண்டார். அண்மைய பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்களை பெறும் வாய்ப்பைப் பெற்று மஹிந்த ராஜபக்ச பிரதமராகி கொண்டார். இதன் மூலம் கோத்தா மஹிந்த தலைமையிலான குடும்ப ஆட்சி மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் உடனடி விளைவாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் 1978இல் ஜே.ஆர் கொண்டுவந்து நடைமுறைப்படுத்திய தனிநபர் தனிக்கட்சி சர்வாதிகாரம் போன்ற பயங்கரவாத சூழலே தலைவிரித்தாடும். அத்தகைய ராணுவ மயப்பட்ட தனிநபர் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் ஏகப் பெரும்பான்மையான அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் மோசமான பொருளாதார சமூக நெருக்கடி நிலைகளுக்கு உள்ளாக நேரிடும். அவர்கள் மீது ஜனநாயக விரோத அரசியல் அடக்குமுறைகள் பன்மடங்கு வேகத்துடன் முன்தள்ளப்படும் அபாய நிலையே தோற்றுவிக்கப்படும். ஏற்கனவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான ஆட்சி இராணுவ மயப்படுத்தலை நடைமுறைப்படுத்தி வருவதுடன் பேரினவாத முன்னெடுப்புகளையும் இணைந்துச் செயல்படுகிறது. இந்நிலையில் 20 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் எஞ்சியுள்ள அனைத்து ஜனநாயக, தொழிற்சங்க, மனித உரிமைகள் யாவும் அதிகார கால்களில் போட்டு மிதிக்கபடும் அபாய சூழ்நிலை உருவாகும். அதேவேளை நாட்டில் பொருளாதாரம் மீட்சி பெற முடியாத அளவுக்கு மென்மேலும் பின் தள்ளப்படும். அந்நிய மூலதனத்தின் பெயரில் நாட்டின் வளங்கள், பல்தேசிய கம்பனிகளாலும் உள்நாட்டு தரகு முதலாளித்துவதாலும் தொடர்ந்து கபளீகரம் செய்யப்படும். அதையே நாடும் மக்களும் காணப் போகிறார்கள். இது கடந்த 42 வருட காலத்தின் தொடர்ச்சியிலிருந்து விடுபட முடியாத துயரமாகவே இருக்கப்போகிறது. அந்நிய வல்லரசு சக்திகளின் நவ காலனிய நிகழ்ச்சி நிரலுக்கு அடி பணிவதற்கான வகையிலும் 20ஆவது திருத்தம் பயன்படுத்தப்படும் என்பதும் மறைக்கப்படும் ஒன்றாகும்.

 

மேலும் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் வாயிலாக நிறைவேற்று அதிகாரம் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படும். அதன் கீழ் தேசிய இனப்பிரச்சனை புறம் தள்ளப்பட்டு நிராகரிக்கப்படுவதுடன் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் தேசிய இனங்கள் மீதான நேரடி, மறைமுக ஒடுக்குமுறைகள் தீவிரப்படுத்தப்படும் என்பதற்கான சமிக்கைகள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தொல் பொருட்களை கண்டறிந்து பாதுகாப்பதற்கான செயலணி, மாடுகள் இறைச்சியாக்கப்படுவதற்கு தடைக்கான முன்னெடுப்பு, பதின்மூன்றாவது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கான பிரச்சாரம், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பற்றிய இறுகிய மௌனம், வீடு, காணி, வேலைவாய்ப்பில் புறக்கணிப்புகள் என்பன உதாரணங்களாக காணப்படுகின்றன.

 

எனவே அனைத்து உழைக்கும் மக்களதும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களதும் அனைத்து ஜனநாயக தொழிற்சங்க மனித உரிமைகளுக்கும் அபாயமான சூழலைக் கொண்டுவரும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாக கண்டித்து நிராகரிக்கிறது. அதேவேளை இச்சட்ட மூலத்தை இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மக்களை ஐக்கியப்படுத்தி எதிர்த்து நிராகரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சி.கா. செந்திவேல்

பொதுச்செயலாளர்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

12-09-2020